tamilnadu

img

கடும் மந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம்... பொதுச் செலவினங்களை அதிகரித்து புத்துயிரூட்டுக...

புதுதில்லி:
நாட்டின் பொருளாதார நிலை கடும் மந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனைச்சரிசெய்து புத்துயிரூட்டவேண்டு மானால் பொதுச் செலவினங்களை அதிகரித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசாங்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள தரவு, நாட்டில் பொருளாதார நிலைமை மொத்தத்தில் பேரழிவினை ஏற்படுத்தி இருப்பதைக் காட்டுகிறது. மேலும் இவ்வாறான நிலைமை என்பதுகோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத் தொடங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதையும் அது காட்டியிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில், (மைனஸ்) 24 சதவீதவீழ்ச்சி ஏற்பட்டிருப்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணரக்கூடியதாகும்.  மத்திய அரசாங்கம் அறிவித்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் தயாரிப்பு எதுவும்இல்லாமல் திட்டமிடாது திடீரென்று அறிவித்த சமூக முடக்கம் என அனைத்தும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தில் இப்பேரழிவிற்குப் பங்களிப்புகளைச் செய்திருக்கின்றன.  

உள்நாட்டுத் தேவையில் பெரும் வீழ்ச்சி 
இவ்வாறு பொருளாதாரப் பாதிப்பிற்குப் பிரதான காரணம், உள்நாட்டுத் தேவையில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகும். அதாவது, நம் நாட்டு மக்களின் கைகளில் வாங்கும் சக்தி பெருமளவு  வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதாகும். மோடி அரசாங்கம் இதனைச் சரிசெய்வதற்கு என்ன செய்திருக்க வேண்டும்?நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டிஎழுப்புவதற்குப் பொது முதலீடுகளைப் பெருவாரியாக அதிகப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரித்திருக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் தேவையை வலுப்படுத்தி இருக்கும். இதனைச் செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், தனியார் கார்ப்பரேட்டுகளால் முதலீடு செய்வதற்காக அதிக நிதி உதவியை அவர்களுக்கு அள்ளித்தந்தும், அவர்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியும், அவர்கள் நாட்டின் சொத்துக்களை சூறையாட வழிவகுக்கும் விதத்திலும் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

தனியாரால் புத்துயிரூட்ட முடியாது 
தனியார் முதலீட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை அளித்தாலும் அதனால் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது. இத்தகைய முதலீடுகளால் உற்பத்தி செய்யப்படுபவை சந்தைகளில் விற்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், அவற்றை உலக அளவிலோ, உள்நாட்டிலோ வாங்குவதற்கு எவருமில்லை.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்க செலவினங்களை அதிகரித்திட வேண்டும் என்று மத்தியஅரசாங்கத்திற்கு இதுநாள்வரையிலும் அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது. எனினும் அரசாங்கம், அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் விதத்திலேயே கொள்கைகளைத் தொடர்ந்து  பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக, பொருளாதார மந்தத்தின் காரணமாக அரசாங்கத்தின் வருவாய்களும் கடுமையாகக் குறைந்திருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம்அளிக்கக்கூடிய விதத்திலும் அவர் களுடைய வாழ்வாதாரங்களுக்கு உதவக்கூடிய விதத்திலும் பணம் மற்றும் இலவச உணவு வழங்குவதுடன், பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகரிப்பதும் அவசியம் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (ந.நி.)
 

;